Sunday 6 September 2015

முஸ்லிம் அரசியல் களம் – சில அவதானங்கள்

புதியதொரு பாரளுமன்றத்தை நாம் தெரியப் போகிறோம். இந்நாட்டுப் பிரஜைகள் நாம். முஸ்லிம் சிறுபான்மையினர். நாட்டுக்கு ஆற்ற வேண்டிய கடமைகள் எமக்குள்ளன. அத்தோடு நாம் எம்மை பலப்படுத்திக் கொள்வது அக் கடமையை ஆற்ற எம்மைத் தகுதியுள்ளவர்களாக ஆக்கும். பலவீன சமூகம் அடுத்த சமூகங்களுக்காக உழைப்பது எப்படிப் போனாலும் தன்னைக் காத்துக் கொள்வதே அதற்குப் பெரும் சிரமமாகும். அரசியல் பலம் எம்மைப் பலப்படுத்துவதற்கான முக்கிய சாதனங்களில் ஒன்று . இந்நிலையில் எமது அரசியல் தலைமைகளிடமிருந்தும், கட்சிகளிடமிருந்தும் நாம் எதிர்பார்ப்பது என்ன? Read more>>>

Saturday 18 April 2015

றவூப் ஸெய்ன்; வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களிலும் கடந்த இரு தசாப்தங்களாக

 
றவூப் ஸெய்ன் இறக்காமத்தில் பிறந்தவர். கிழக்கிலங்கையில் அம்பாறை மாவட்டத்திலுள்ள அழகிய கிராமம் அது. ஆரம்பக் கல்வியையும் இடைநிலைக் கல்வியையும் இறக்காமம் அல்-அஷ்ரப் மஹா வித்தியாலயத்தில் பெற்ற பின் பேருவளை ஜாமிஆ நளீமிய்யாவில் இணைந்து 07 ஆண்டுகால ஷரீஆ கற்கை நெறியை முதற்தர சித்தியுடன் பூர்த்தி செய்தார். பின்னர் பேராதனைப் பல்கலைக் கழகத்தில் வெளிவாரிப் பட்டப்படிப்பை முடித்து, இந்தியாவின் காமராஜ் பல்கலைக்கழகத்தில் வரலாற்றுத் துறையில் முதுமானி, முதுகலைமானி பட்டங்களைப் பெற்றுள்ள இவர், தற்போது தனது கலாநிதிக் கற்கை நெறிக்காக தயாராகி வருகின்றார். கொழும்பு பல்கலைக்கழகத்தில் பிரயோக சமூகவியலிலும் திறந்த பல்கலைக்கழகத்தில் கல்வியியலிலும் டிப்ளோமா பட்டம் பெற்றுள்ளார். மனைவி பாதிமா ஹனான். பிள்ளைகள் ஆகிப் ஸெய்ன், ஆலிப் அனாம்.
அரசியல். வரலாறு, கல்வி, தத்துவம், சமூவியல், உளவியல், பின்கொலனியம், சர்வதேச உறவுகள் ஆகிய அறிவுப் புலங்களில் தீவிரமாக இயங்கி வருபவர். 15 இற்கு மேற்பட்ட சமூக, கல்வி, உளவியல் துறை ஆய்வுகள் இவரால் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அது தவிர நூற்றுக்கு மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகளும் எழுதப்பட்டுள்ளன. அதற்கப்பால் பல்வேறு துறை சார்ந்த முப்பது நூல்களை அறிவுலகத்திற்கு வழங்கியுள்ளார். றவூப் ஸெய்னின் பல்வேறு துறைசார்ந்த பல நூறு கட்டுரைகள் பத்திரிகைகள், சஞ்சிகைகள், ஆய்விதழ்கள், சிறப்பிதழ்களில் வெளிவந்துள்ளன.
வானொலி, தொலைக்காட்சி மற்றும் அனைத்து வகை அச்சு ஊடகங்களிலும் கடந்த இரு தசாப்தங்களாக பங்களித்து வரும் இவர் இலங்கையிலுள்ள அனேகமான முஸ்லிம் கிராமங்களையும் பாடசாலைகளையும் தரிசித்துள்ளார். அங்கெல்லாம் சமூக, கல்வி, சமய, கலாசார நிகழ்ச்சிகளில் தனித்தும் நிறுவன ரீதியிலும் ஒரு வினைத்திறனுள்ள வளவாளராகப் பங்காற்றி வருகின்றார். (Lankascholars)

Home           Sri Lanka Think Tank-UK (Main Link)

Thursday 9 April 2015

நவீன இஸ்லாமிய சிந்தனையின் சில கட்டங்கள்



நவீன இஸ்லாமிய சிந்தனை ஜமாலுத்தீன் ஆப்கானி, முஹம்மத் அப்துஹு, ரஷீத் ரிளா,போன்றோரிலிருந்து துவங்கி இமாம் ஹஸனுல் பன்னா, மௌலானா மௌதூதி, ஷெய்க் முஹம்மத் அல் கஸ்ஸாலி, ஸையித் குதுப் போன்றோரிடையே ஓடி வந்தது என்பது உண்மையே. ஆயினும் அது வேகமாக மக்களிடையே பரவி, ஓர் இஸ்லாமிய எழுச்சியாக மாறி, சர்வதேச ரீதியாகவும் பரவி, பேசு பொருளாக மாற சில வரலாற்று நிகழ்வுகள் காரணமாக இருந்துள்ளன: அவை அதற்கு உந்து சக்தியாகவும் இருந்துள்ளன. அவை:

(1) 1967 இஸ்ரேலிடம் அரபு உலகம் குறிப்பாக ஜமால் அப்துல் நாஸரை தலைமையாகக் கொண்ட எகிப்து தோல்வியுற்றமை.

இது அரபு சமூகத்தையே உலுப்பி விட்ட பூகம்பம் போன்றாகியது. அது வரை அரபு உலகில் கொடிகட்டிப் பறந்த அரபு தேசிய வாதம், கம்யூனிச செல்வாக்கு ஆட்டம் கண்டது. ஒடுக்கப்பட்டிருந்த இஸ்லாமிய வாதிகள் வெளியில் வந்தார்கள். மக்களும் தீர்வுக்கு இஸ்லாத்திடமே வர முனைந்தார்கள்.

(2) 1991 : சோவியத் யூனியனின் வீழ்ச்சி.

அந்தப் பெரும் வல்லரசு துண்டாடப்பட்டது. அதன் கொள்கையும் பெரும் பின்னடைவுக்குட்பட்டது. அந்த வல்லரசினுள்ளே நசுக்குண்டு வாழ்ந்த முஸ்லிம்களும் எழுந்தார்கள்.

அரபு இஸ்லாமிய உலகினுள் இஸ்லாத்திற்குப் பிரதியீடு என முன்வைக்கப்பட்ட கம்யூனிசசோசலிச சிந்தனைகள் கருத்து ரீதியாக பின்வாங்கின. இஸ்லாமிய எழுச்சி வீறு கொண்டெழுந்தது; பரவியது. இன்னொரு உலக சக்தியாகத் தோற்றம் பெறவும் துவங்கியது.

(3) செப்டம்பர் 11-2001: நியுயோர்க் சர்வதேச வர்த்தக மைய இரட்டை கோபுரங்கள் உடைந்து தகர்ந்தமை ஒரு பெரும் அதிர்வை உலகம் முழுக்க ஏற்படுத்தியது.

இந்த நிகழ்வின் பின்னணி பற்றி எத்தனையோ கருத்துக்கள், வாதங்கள். ஒன்றும் தெளிவான முடிவான வாதங்களாக அமையவில்லை. சிலவேளை இது அவிழ்க்க முடியாத வரலாற்று மர்மமாகவே இருந்து விடக் கூடும். ஆனால் இந்த நிகழ்வைத் தொடர்ந்து இஸ்லாமியப் பயங்கர வாதம், நாகரீகங்களின் மோதல் என்று பேசப் பட்டது.

இஸ்லாமிய உலகின் மீது இது ஒரு பெரும் பாதிப்பை ஏற்படுத்தினாலும் இஸ்லாம் எங்கும் பேசப்பட்டது. ஆராயப் பட்டது. இஸ்லாத்தை மிகச் சரியாக முன்வைக்கும் ஒரு சந்தர்ப்பமும் கிடைக்கப் பெற்றது.

(4) அரபு வசந்தம்: நான்கு வருடங்களுக்கு முன் துவங்கிய அரபு வசந்தம்

இஸ்லாமிய உலகை உலுப்பிய இன்னொரு நிகழ்வு. இஸ்லாமிய வாதிகள் ஆட்சியில் அமர்ந்தார்;கள். அல்லது தங்களது வரலாற்று எதிரிகளான மதச்சார்பற்ற சிந்தனைப் பின்னணி கொண்டவர்களாக கூட்டுச் சேரவோ, அல்லது பேச்சுவார்த்தை நடாத்த வேண்டிய நிலைக்கோ தள்ளப் பட்டார்கள்.
இவ்வனைத்து நிகழ்ச்சிகளின் தொடரிலும்:
ஜிஹாத் என்ற கருத்தியலை மீள் பாரிசீலனை செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது.
யுத்தம் என்பது என்ன? அடிப்படையானதொரு இஸ்லாமியக் கடமையா? பாதுகாப்புக்காக யுத்தமா? அல்லது குப்ர், ஷிர்க்கை ஒழிப்பதற்கான யுத்தமா?

இஸ்லாமிய அரசியல் சிந்தனை:

ஆட்சியாளன்: கலீபா, அமீர் அல்-முஃமினீன், ஜனாதிபதி என்ற பிரயோகங்கள் எப்படி நோக்கப்பட வேண்டும். இவர் மாறி மாறி வரலாமா? ஆயுள் முழுமையிலும் அவர் இருக்கலாமா?
ஜனநாயக ஒழுங்குகள் பற்றிய கண்ணோட்டம்.
தேர்தல், எதிர்க்கட்சி
இவ்வாறே அழகியல் கலைகள், பெண்கள் பற்றிய சர்ச்சைகளும், வாதங்களும்.

இப்பின்னணியில் மகாஸித் ஷரீஆஇஸ்லாமிய ஷரீஆவின் உயர் இலக்குகள், இஸ்லாமிய ஒழுக்க விழுமியங்கள் பற்றிய ஆய்வுகள் முன்னெடுக்கப் பட்டு வருகின்றன.

அஹ்மத் ரைஸூனி, யூஸுப் அல் கர்ளாவி, தாரிக் ரமழான், முஹம்மத் முக்தார் ஷன்கீதி, அபூ ஸுலைமான், ஜாஸிர் அவ்தா போன்ற பல சிந்தனையாளர்கள் இப் பகுதியில் பெரும் பங்களிப்பு செய்து வருகிறார்கள்.

துருக்கியில் தையிப் ஒர்தகோனின் கட்சி ஆட்சிக்கு வந்தமை இஸ்லாமிய அரசியல் சிந்தனைப் பாரம்பரியத்தில் ஒரு வித்தியாசமான சிந்தனையை எழுப்பி விட்டது.

மதச்சார்பின்மை என்பதற்கு இஸ்லாமிய வரையரைக்குள் இருந்து கொண்டே பொருள் கொடுக்கலாமா?

மார்க்க செயற்பாடுகள் எனப்படும் தொழுகை போன்றவற்றை தனிமனித சுதந்திரம் என விட்டு விடலாமா?

இவ்வாறு இஸ்லாமிய சிந்தனை உலக நிகழ்வுகளின் உராய்வுகளாலும், சிந்தனை மோதல்களாலும் தன்னைப் புடம் போட்டு வளர்ந்து வருகிறது. இந்த சிந்தனை வளர்ச்சி நிலைகளை சிறுபான்மையினரான நாம் ஆழ்ந்து விளங்கிப் பயன் பெறல் மிக அவசியமாகும். (By: MAM Mansoor)

Monday 6 April 2015

முஸ்லிம் அரசியலின் புதிய திசை… எதிர்வரும் பொதுத் தேர்தல் அதனைத் தீர்மானிக்குமா?



நல்லாட்சிக்கான கோரிக்கை வெற்றி பெற்று ஒரு புதிய அரசு நாட்டில் உதயமாகியிருக்கிறது. அந்த அரசின் நூறு நாள் வேலைத்திட்டத்திற்கு எதிர்க் கட்சி உட்பட பல்வேறு கட்சிகள் ஆதரவு வழங்கியிருக்கின்றன

அண்மையில் புதிய அரசினால் சமர்ப்பிக்கப்பட்ட இடைக்கால வரவு செலவுத் திட்டத்திற்கெதிராக பாராளுமன்றத்தில் ஒரே ஒரு வாக்கு மட்டுமே அளிக்கப்பட்டிருக்கிறது. மக்களுக்கு நன்மை தரும் வரவு செலவுத் திட்டம் என்பதனால் அதனை எதிர்க்க எவரும் துணியவில்லை என்பது கண்கூடு. கடந்த அரசினால் மேற்கொள்ளப்பட்ட வீண்விரயங்கள் பெருமளவில் குறைக்கப்பட்டு அவற்றினால் மக்கள் பயனடையும் நிலை தோன்றியுள்ளது. எரிபொருள் உட்பட பல்வேறு அத்தியவசியப் பொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளன.

மற்றோரு புறத்தில் பாரிய ஊழல் மோசடிகளைக் கண்டறியும் வேலை துவக்கப்பட்டுள்ளது. பெரியவர்கள், சிறியவர்கள் என்ற பாரபட்சமின்றி சட்டத்தை முல்படுத்தும் நிலை நாட்டில் மீண்டும் ஜனநாயகம் தழைக்கும் என்பதற்கு கட்டியம் கூறியிருக்கிறது. ஊடக சுதந்திரம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. நேற்றைய அராஜகங்களை விமர்சிக்காதவர்கள் மேற்கூறப்பட்ட நன்மைகளோடு இன்று மலர்ந்திருக்கும் புதிய ஆட்சியை சுதந்திரமாக விமர்சிக்கின்றார்கள்.

அது மட்டுமல்ல, வலிந்து தோற்றுவிக்கப்பட்ட மதவாதம் மற்றும் இனவாதத்தின் அச்சுறுத்தல்களிலிருந்து நாடு இப்போதைக்கு விடுபட்டு நிம்மதிப் பெருமூச்சு விடும் வாய்ப்பைப் பெற்றிருக்கிறது. நீதிகளை அப்பட்டமாக ஆதரிக்கும் ஒரு சிலரைத் தவிர ஏனையோர் நாடு உன்னதமான ஒரு நாகரிகத்தை நோக்கி சகல துறைகளிலும் முன்னேற வேண்டும் என அவாக் கொண்டிருக்கின்றனர்.

இத்தகைய ஒரு பின்னணியில் முஸ்லிம் கட்சிகளும் முஸ்லிம் அரசியல்வாதிகளும் நாட்டின் இந்தத் திருப்பத்தில் தங்களையும் இணைத்துக் கொள்வார்களா? அல்லது சந்தர்ப்பவாத அரசியலின் பக்கமே தொடர்ந்து நிலைத்திருப்பார்களா?

கடந்த ஜனாதிபதித் தேர்தலில் நல்லாட்சிக்கான கோரிக்கை வெற்றி பெறுவதற்கு எந்த வகையிலும் சிறுபான்மைக் கட்சிகளோ அரசியல்வாதிகளோ காரணமாக இருக்கவில்லை. இறுதி நேரத்தில் மைத்திரி அணியோடு இணைந்து கொண்டதைத் தவிர. அவர்கள் இணைவதற்கு முன்பே சிறுபான்மை சமூகங்கள் குறிப்பாக முஸ்லிம்கள் மைத்திரி அணியோடு இணைந்து அதற்கு வாக்களிப்பதாகத் தீர்மானித்திருந்தனர். எனினும், புதிய அரசில் எமது முஸ்லிம் அரசியல் தலைவர்கள் கௌரவிக்கப்பட்டிருக்கிறார்கள்.

தொடர்ந்தும் இந்த கௌரவத்தைத் தக்க வைத்துக் கொள்வதற்கு அவர்கள் கௌரவமான ஒரு அரசியலை முன்னெடுக்க வேண்டும் என்பதே முஸ்லிம் சமூகத்தின் எதிர்பார்ப்பாகும். இந்த கௌரவத்தைப் பாதுகாக்கும் பொறுப்பை முஸ்லிம் கட்சிகளிடமும் அரசியல் தலைவர்களிடமும் மட்டும் விட்டுவிடாமல் சிவில் சமூகமும் அவர்களோடு இணைந்து செயலாற்ற முன்வர வேண்டும். இணைந்து செயலாற்ற முடியாவிட்டால் ஜனாதிபதித் தேர்தலில் அரசியல் தலைவர்களையும் கட்சிகளையும் ஒரு புறம் வைத்துவிட்டு மக்கள் எடுத்தது போன்ற கௌரவமான தீர்மானங்களை சிவில் சமூகம் முன்வந்து எடுக்க வேண்டும். அதற்கான ஓர் ஆலோசனையே இந்த ஆக்கமாகும்.

உண்மையில் நல்லாட்சி பற்றி பேசுவதற்கும் நல்லாட்சிக்கான முன்மாதிரிகளை வழங்குவதற்கும் முதல் வரிசையில் இருக்க வேண்டியவர்கள் முஸ்லிம் அரசியல் தலைவர்களே. பிர்வ்ன் நம்ரூத் போன்ற கொடிய ஆட்சியாளர்களுக்கு முன்னால் நல்லாட்சி பற்றிப் பேசிய நபிமார்களின் பரம்பரையில் வந்தவர்கள் நாம் நாடே நல்லாட்சியின் பக்கம் கவனத்தைத் திருப்பியிருக்கின்ற வேளையில் இனவாத, ஊர்வாத, மதவாத, சந்தர்ப்பவாத அரசியலை முஸ்லிம் சமூகம் இனியும் முன்னெடுக்கக் கூடாது.

எதிர்வரும் பொதுத் தேர்தலும் நல்லாட்சிக்கான கோரிக்கைக்கு மக்கள் ஆணையைப் பெறும் நோக்கிலேயே நிச்சயம் நடத்தப்படும். அப்போது நல்லாட்சிக்கான பிரதிநிதிகளையே முஸ்லிம் சமூகம் பாராளுமன்றத்திற்கு அனுப்ப வேண்டும். அவர்கள் முஸ்லிம்களாகவும் இருக்கலாம், முஸ்லிமல்லாதவர்களாகவும் இருக்கலாம். ஜனாதிபதித் தேர்தலில் முஸ்லிம் சமூகம் ஒரு முஸ்லிமுக்கு வாக்களிக்கவில்லை நல்லாட்சியை நோக்கமாகக் கொண்டு களமிறங்கிய முஸ்லிமல்லாதவருக்கே வாக்களித்தது. இதுதான் முஸ்லிம் சமூகம் சிறுபான்மையாக வாழும் நாட்டில் பின்பற்ற வேண்டிய தர்மமாகும். குர்ஆன் நன்மைக்கு ஒத்துழையுங்கள் என்று கூறுகிறதே தவிர நன்மையை அடக்கம் செய்துவிட்டு இனத்துக்கு ஒத்துழையுங்கள் என்று கூறவில்லை.

எனவே, எதிர்வரும் பொதுத் தேர்தலிலும் முஸ்லிம் சமூகம் தனது அணுகுமுறை எவ்வாறிருக்க வேண்டும் என்பதை இப்போதிருந்தே சிந்திக்க வேண்டும். முஸ்லிம் பிரதிநிதித்துவத்தையும் பாதுகாத்து நல்லாட்சிக்கும் பங்களிப்புச் செய்யும் விதமாக அந்த அணுகுமுறை இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.

அவ்வாறாயின் முஸ்லிம் சமூகத்தின் நாளைய பாராளுமன்றப் பிரதிநிதிகள் யார் என்பதே எமக்கு முன்னாலுள்ள கேள்வி. சிவில் சமூகத் தலைமைத்துவங்கள் அல்லது புத்திஜீவிகள், நலன் விரும்பிகள், முஸ்லிம் அமைப்புகள், சங்கங்கள், சம்மேளனங்களின் தலைவர்கள் உட்பட அனைவரும் ஒன்றிணைந்து இப்போதே இந்தக் கேள்விக்கு விடை காண்பதற்கான பேச்சுவார்த்தைகளைத் துவக்க வேண்டும்.

எமது பாராளுமன்றப் பிரதிநிதிகளை நாம் தெரிவு செய்யும் முறைமையால் ஏனைய சமூகங்களும் கவரப்பட வேண்டும். நல்லாட்சி என்பது பாராளுமன்றத்தில் நடைபெறுவதல்ல. நல்லாட்சிக்கான தலைவர்களைத் தெரிவு செய்வதிலேயே அது தங்கியிருக்கிறது என்பதை நாடு உணரும் விதமாக அடுத்த பொதுத் தேர்தலுக்கான முஸ்லிம் வேட்பாளர்களை முஸ்லிம் சமூகம் தெரிவுசெய்ய வேண்டும்.

அவ்வாறு தெரிவுசெய்யப்படும் முஸ்லிம் பாராளுமன்றப் பிரதிநிதி ஒருவருக்கு இருக்க வேண்டிய குறைந்தபட்ச தகைமைகளைக் கீழே தருகிறோம். தெரிவு முயற்சியில் இறங்குகின்ற மக்கள் குழுக்களுக்கு இது உறுதுணையாக அமையலாம்

01.
கல்வித் தகைமை:

குறைந்தபட்சம் வேட்பாளராகத் தெரிவு செய்யப்படுபவர் ஒரு பட்டதாரியாகவேனும் இருக்க வேண்டும். இன்றைய காலத்தில் பட்டதாரி என்பது மிகக் குறைந்த கல்வித் தகைமையே. அந்தளவுகூட இல்லாத ஒருவர் இன்றைய உலக மற்றும் நாட்டு நடப்புகளை விளங்கிக் கொள்வதும் சட்டம் இயற்றுகின்ற பாராளுமன்றத்தின் பிரதிநிதியாக பாராளுமன்ற அமர்வுகளில் கலந்து கொள்வதும் அர்த்தமற்றது.

02.
அரசியல் அனுபவத்தை எளிதில் பெறத்தக்கவர்:

அரசியல் அனுபவம், முதிர்ச்சி என்பன பிறப்பால் கிடைப்பவை அல்ல. தேடிப் பெறத்தக்கவை. ஏற்கனவே அரசியல் அனுபவமும் முதிர்ச்சியும் அமையப் பெற்ற ஒருவரிடம் நாம் இங்கே பட்டியல்படுத்தும் ஏனைய தகைமைகளும் இருக்குமாயின் புதிய ஒருவர் அவசியமில்லை. பழையவரிடம் அந்தத் தகைமைகள் இல்லாதபோது அரசியல் அனுபவத்தைப் பெறத்தக்க ஒருவர் சமூகத்திலிருந்து தெரிவு செய்யப்படல் வேண்டும்.

03.
இனவாதமற்றவர்:

தெரிவு செய்யப்படும் வேட்பாளர் இனவாதம், ஊர்வாதம், குலவாதம் கட்சிவாதங்களுக்கு அப்பால் நின்று செயல்படக் கூடியவராக இருக்க வேண்டும். தனது சமூகத்திலும் பிற சமூகங்களுக்கு மத்தியிலும் இணக்கப்பாட்டை ஏற்படுத்தி பாரபட்சமற்ற மக்கள் சேவை செய்பவராகவும் திகழ வேண்டும். வாக்கு வேட்டைக்காக இனவாதம், ஊர்வாதம் பேசுவோராக அவர்கள் இருக்கக் கூடாது.

04. உழைப்பாளி:

மக்களைத் தேடிச் சென்று மக்களின் பிரச்சினைகளைக் கேட்டறிந்து, அவர்களுக்கு சேவை செய்யும் உழைப்பாளியாக அவர் இருக்க வேண்டும். அவரைத் தேடி மக்கள் செல்ல வேண்டுமாயின் அத்தகையதொரு பிரதிநிதிக்காக மக்கள் சிரமப்பட வேண்டியதில்லை. அவரது உழைப்பு அனைத்து இன, மத மக்களுக்கும் பாரபட்சமின்றிக் கிடைக்கவும் வேண்டும். சோம்பேறிகளை பரக்கத்துக்காக பாராளுமன்றம் அனுப்புவதை முஸ்லிம் சமூகம் இனியும் செய்யக் கூடாது.
 
05. தொடர்பாடல் திறன்:
 
குறைந்தபட்சம் சிங்களத்திலும் தமிழிலும் சரளமாகக் கதைக்கும் ஒருவரே பாராளுமன்றம் செல்ல வேண்டும். பாராளுமன்றக் கதிரையை சூடாக்கி விட்டு பாராளுமன்ற உணவகத்தில் உணவு உட்கொள்வதற்காகச் செல்லும் பிரதிநிதிகளை மக்கள் தங்களது பெறுமதியான வாக்குகளால் தெரிவுசெய்ய வேண்டியதில்லை. கல்வித் தகைமை, அரசியல் சாணக்கியம் என்பவற்றோடு மொழித்திறனும் இணைந்தால் மட்டுமே எமது பாராளுமன்ற பிரதிநிதித்துவம் அர்த்தமுள்ளதாக இருக்கும்.
 
06. தேச நலனுக்குக் குரல் கொடுப்பவர்:
 
பாராளுமன்றத்தில் தனது சமூகத்துக்காகவும் பிற சமூகங்களுக்காகவும் பேசும் ஒருவரே முஸ்லிம்கள் சார்பில் வேட்பாளராகத் தெரிவு செய்யப்படல் வேண்டும். நாடு நலம் பெற்றால் நாமும் நலன் பெறுவோம் என்ற கோட்பாட்டை விளங்கி செயல்படுத்துபவராகவும் அவர் இருத்தல் வேண்டும். அப்போதுதான்இலங்கை எங்களது தேசம்என்று நாம் உறுதியாகக் கூற முடியும். இந்தத் தேசத்தின் நலன் எமது நலன் என்று கருதாமல் தேசத்தின் ஒரு குழுமத்துக்காக மட்டும் குரல் எழுப்புபவர்களால் இது எங்களது தேசம் என்று கூற என்ன அருகதை இருக்கிறது!
 
07. கலந்தாலோசிப்பவர்:
 
எமது பாராளுமன்றப் பிரதிநிதிகள் பாராளுமன்றத்தில் உரையாற்றுவதாக இருந்தாலும் சரிமக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதாக இருந்தாலும் சரிஅபிவிருத்தி வேலைகளில் ஈடுபடுவதாக இருந்தாலும் சரிஅதற்காக தமது பன்முகப்படுத்தப்பட்ட வரவு, செலவு நிதியிலிருந்து ஒதுக்கீடு செய்வதாக இருந்தாலும் சரிசமூகத் தலைமைத்துவங்களோடு கலந்துரையாடி, கலந்தாலோசித்து கருமமாற்றுபவராக இருக்க வேண்டும். தனது வாக்கு வங்கியைத் தக்க வைத்துக் கொள்வதற்காக தான் நினைத்தவாறு கருமமாற்றும், செலவு செய்யும் அரசியல்வாதிகளால் சமூகம் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களைக் காண முடியாது. எனவே, அனைத்தையும் கலந்தாலோசித்து, பேசித் தீர்க்கும் பண்பினர்கள்தான் இனி பாராளுமன்றம் செல்ல வேண்டும் என்பதில் சமூகம் விடாப்பிடியாக இருக்க வேண்டும்.
 
08. பொறுப்புக் கூறும் பண்பினர்:
 
ஒரு முஸ்லிமைப் பொறுத்தவரை தனது அத்தனை நடவடிக்கைகளுக்கும் மறுமையில் அல்லாஹ்விடம் பொறுப்புக் கூற வேண்டும் என்ற கடமைப்பாடுள்ளவராகவே இருப்பார். அதனால் அவர் தனதுள்ளமும் கையும் எப்போதும் சுத்தமாக இருக்கவேண்டும் என்பதில் கவனம் செலுத்துவார். பொதுவுடமையை தனதுடமையாக அவர் ஒருபோதும் நினைக்க மாட்டார். செல்வம் அல்லாஹ்விற்குச் சொந்தமானது. நான் அதனை அவனது அனுமதியுடன் நிர்வகிக்கும் பிரதிநிதி என்பதே இஸ்லாம் அவருக்குக் கற்றுக் கொடுக்கும் அரசியல் பாடமாகும்.

இந்தப் பொறுப்புணர்வோடு சட்டத்துக்கு முன்னாலும் மக்களுக்கு முன்னாலும் நான் பதில் கூறவேண்டியவன் என்பதையும் ஒரு முஸ்லிம் உணர்ந்திருப்பார். இந்தப் பண்பும் பக்குவமில்லாதவர்களுக்கு வாக்களித்தால் அவர்கள் செய்யும் பாவங்களின் பங்குதாரிகளாக வாக்களித்தவர்களும் மாறுவார்கள். வாக்களித்தவர்களின் பட்டோலைகளில் அந்தப் பாவங்கள் பதியப்பட்டு மறுமையில் இவர்களோடு அவர்களும் சேர்த்து தண்டிக்கப்படுவார்கள். எனவே, நாட்டினதும் மக்களினதும் உடைமைகளை மானிதமாகக் கையாளும் பாராளுமன்றப் பிரதிநிதிகளை முஸ்லிம்கள் தெரிவுசெய்ய வேண்டும். பதியுதீன் மஹ்மூத், .ஸீ.எஸ். ஹமீத், பாக்கிர் மாக்கார் போன்ற முஸ்லிம் பாராளுமன்ற பிரதிநிதிகள் இந்த வகையில் முஸ்லிம் சமூகத்திற்குப் பெருமை சேர்த்த உதாரண புருஷர்களாவார்.

09.
கொள்கைப் பற்றுடையவர்:

இதனை வேறு வார்த்தையில் சொன்னால் விலை போகாதவர் எனலாம். தனக்கென சிறந்த கொள்கைகளும் விழுமியங்களுமில்லாதவர்கள் எதை வேண்டுமானாலும் செய்வார்கள். அவர்கள் தன்னையும் விற்றுதனது மார்க்கத்தையும் விற்றுசமூகத்தையும் விற்றுதங்களது பிழைப்பைத் தக்கவைத்துக் கொள்வார்கள். விற்பதற்கு அவர்களிடம் எதுவும் எஞ்சியிருக்காது. மானம் மரியாதைகளையும் கூட அவர்கள் விற்று விடுவார்கள். அவ்வாறு விற்றுப் பிழைப்பதற்காக கட்சி தாவுவதையும் நேற்றைய நண்பர்களை எதிரிகளாக்கிநேற்றைய எதிரிகளை நண்பர்களாக்கிக் கொள்வதிலும் கைதேர்ந்தவர்களாக இருப்பார்கள். எவன் எக்கேடு கெட்டால் என்ன, இராமன் ஆண்டாலும் சரி இராவணன் ஆண்டாலும் சரி ஆளுபவரின் இருக்கையருகே தானும் அமர்ந்து கொள்ள இடம் கிடைத்தால் போதும் என்பதே இவர்களது நியாயப்பாடாக இருக்கும்.

இத்தகையவர்களைப் பாராளுமன்றம் அனுப்பி சமூகத்தை சந்தி சிரிக்க வைக்கும் வாக்காளர்கள் எமது சமூகத்தின் மீது மண்ணை வாரிப் போடுகிறார்கள் என்றே கூற வேண்டும். முஸ்லிம் சமூகம் தெரிவு செய்யும் பிரதிநிதிகள் இத்தகையோராக இருக்கக் கூடாது. வேட்பாளர்களாக இருக்கும்போது தமது கொள்கைகளைப் பிரகடனம் செய்யும் மாநாடுகளை அவர்கள் நடத்த வேண்டும். அந்தக் கொள்கைகளை அவர்கள் சதாவும் பேணி வருகிறார்களா என்பதை மக்கள் அவதானித்து வரவேண்டும். மக்கள் மன்றத்தில் இதற்கான சத்தியப் பிரமாணங்கள் செய்வது கூடப் பொருத்தமானதாகவே இருக்கும்.
முஸ்லிம்கள் பாராளுமன்றப் பிரதிநிதித்துவத்தைப் பெற முடியுமான பகுதிகளில் மக்கள் மன்றங்களை அமைத்து அவற்றினூடாக தங்களது பிரதேசத்திலிருந்து மேலே கூறப்பட்ட தகைமைகள் கொண்டவர்களைத் தேடித் தெரிவு செய்யும் முறையொன்றை வகுக்க வேண்டும். அத்தகையவர்கள் பலர் இருந்தால் அவர்களுள் பொருத்தமானவரைத் தெரிவு செய்வதற்கான முறைமையொன்றையும் தயார் செய்ய வேண்டும். அவ்வாறு தெரிவு செய்யப்படும் வேட்பாளர்கள் ஏற்கனவே அப்பிரதேசத்திலிருந்து பாராளுமன்றத்திற்குத் தெரிவு செய்யப்பட்டவராகவும் இருக்கலாம். அல்லது புதியவராகவும் இருக்கலாம். தெரிவின்போது தகைமைகளுக்கே முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். தகைமைகளைப் பின் தள்ளிவிட்டு முகங்களை முன் தள்ள முற்படக் கூடாது.

அவ்வாறு தெரிவு செய்யப்பட்டவர்களை முஸ்லிம்களின் பிரதிநிதியாகவன்றி முஸ்லிம்கள் செறிந்து வாழும் பிரதேசத்தில் சிறுபான்மையாக இருக்கும் ஏனைய சமூகங்களின் பிரதிநிதியாகவும் அவர்களை நாம் ஆக்க வேண்டும். ஏனெனில், அங்குள்ள முஸ்லிமல்லாதவர்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு அப்பிரதேசத்தில் அவர்களுடைய பிரதிநிதி ஒருவர் வருகின்ற வாய்ப்பு இல்லாதிருக்கலாம். இந்த நடைமுறையை நாம் அமுல்படுத்தும்போதுதான் நாட்டுக்கான பற்றும் ஏனைய சமூகங்களுக்கான எமது பங்களிப்பும் உறுதி செய்யப்படுகின்றது.

அதே போன்று முஸ்லிம் பிரதிநிதித்துவமொன்றைப் பெற முடியாத பிரதேசங்களில் முஸ்லிம்கள் முஸ்லிம் கட்சியொன்றுக்கு வாக்களிக்க வேண்டிய அவசியமில்லை. அங்கு பெரும்பான்மை சமூகத்தவர்களையே நாம் எமது பிரதிநிதிகளாகக் கருத வேண்டும். அத்தகைய சூழலில் அங்கிருக்கும் முஸ்லிம்களும் மக்கள் மன்றங்களை அமைத்து முஸ்லிமல்லாதவர்களில் நல்லாட்சிக்குத் துணையாக வேலை செய்யப்போகின்ற நல்லவர் யார் என்பதையே தேடித் தெரிய வேண்டும். நாம் மேலே விபரித்த நற்பண்புகள் உடையோரை அத்தகையோருக்கு மத்தியில் இனம் கண்ட பின்னர் முஸ்லிம்கள் எவ்வாறானதொரு தமிழருக்கோ அல்லது சிங்களவருக்கோ வாக்களித்து அவர்களைத் தமது பிரதிநிதிகளாகப் பாராளுமன்றம் அனுப்பலாம்.

தற்போதைய சூழலில் நல்லாட்சிக்கான முஸ்லிம்களின் பங்களிப்பு இவ்வாறுதான் சிந்திக்கப்பட வேண்டும். வருகின்ற பொதுத் தேர்தல் அந்தப் பங்களிப்பை முஸ்லிம் சமூகம் வழங்குவதற்கான சிறந்ததொரு வாய்ப்பாகும். நாடு நல்லாட்சி நோக்கி நகர வேண்டும் என்று சிந்திக்கின்றபோது முஸ்லிம் சமூகம் சந்தர்ப்பவாத அரசியலுக்குள் முடங்கிக் கிடப்பது எந்தவகையில் பொருந்தும் என சிந்தித்துப் பாருங்கள். கடந்த காலத்தில் எம்மைப் பற்றிய பிழையான பிரதிமையை இந்த நாட்டுக்கும் குறிப்பாக, இனவாதிகளுக்கும் வழங்கிய பெருமை இந்த சந்தர்ப்பவாத அரசியலுக்கே உண்டு. அந்த அவலத்தையும் அவப் பெயரையும் துடைத்தெறிவதற்கு அல்லாஹ் அருமையானதொரு வாய்ப்பை எமக்கு வழங்குகிறான். அதனைச் சிறப்பாகப் பயன்படுத்தி தேசிய நலன்களோடு பிணைத்துக் கொண்ட ஒரு சமூகமாக எம்மை மாற்றிக் கொள்ள முன்வருவோமாக!

முஸ்லிம் சமூகத்திலும் நல்லாட்சி பற்றிய சிந்தனையை முன்வைத்து, கடந்த சில வருடங்களாக இயங்கி வருகின்ற ஒரு அரசியல் கட்சியின் நகர்வுகள் இந்த வகையில் பாராட்டத்தக்கவை. எனினும் முஸ்லிம் சமூகத்தினுள் எதிர்ப்பு அரசியலைத் தவிர்த்து, உடன்பாட்டு அரசியலை முன்னெடுப்பது பற்றி அவர்கள் தீவிரமாக சிந்திக்க வேண்டும். முஸ்லிம் சமூகத்தில் புரையோடிப் போயிருக்கும் சந்தர்ப்பவாத அரசியலை விமர்சிக்காமல், தமக்கு அரசியல் வாழ்வு இல்லை என்று அவர்கள் கருதினால் அவர்களது அரசியல் பயணம் நெருக்கடி மிக்கதாகவே இருக்கும். முஸ்லிம் சமூகம் ஒப்பீட்டளவில் ஏனைய சமூகங்களை விட அரசியல் முதிர்ச்சி குறைவான சமூகம் என்பதால் நல்லாட்சிக் குழு சமூகத்தில் உரிய இடத்தைப் பெற முடியாமல் போகவும் வாய்ப்பு இருக்கிறது. (Hajjul Akbar)